Saturday, March 9, 2019

மார்ச்-9 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert



தேவாரம்


          நற்றமிழ் வல்ல ஞான சமபந்தன்
              நாவினுக்கு அரையன் நாளைப் போவானும்
          கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி
              கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
          குற்றஞ் செய்யினும் குணம்எனக் கருதும்
              கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
          பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
              பொய்கை சூழ் திருப்புன்கூர் உளானே.

      தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் பொருந்தியிருப்பவனே. நல்ல தமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நந்தனார், மூர்க்க நாயனார், சாக்கியர், சிலந்தி, கண்ணப்பர் இவர்கள் குற்றம் செய்தார்கள். அவற்றை நீ குணமாகக் கொண்டாய். அத்தகைய உன் கருணையைக் கண்டு நானும் உன் திருவடியை அடைந்தேன். என் குற்றங்களைப் பொறுத்து என்னை ஏற்றுக்கொள்வீராக

திருவாசகம்

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
       கண் இணைநின் திருப்பாதம் போதுக்கு ஆக்கி
 வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன்
     மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
   வந்துஎனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
         மால் அமுதப் பெருங் கடலே மலையே உன்னைத்
தந்தனை செம்தாமரைக்காடு அனைய மேனித்
     தனிச்சுடரே இரண்டும்இல் இத்தனியனேற்கே.


       செந்தாமரைக் காடனைய திருமேனியுடைய ஒப்பற்ற ஒளியுருவனே, நாயனைய நான் உன்னை எண்ணி, எண்ணி உருகுமாறு செய்து, எனது இரு கண்களையும் உனது திருவடி மலரில் சாத்தும் மலராக்கி, எனது வாழ்த்தையும் வழிபாட்டையும் உனது மலர்த்திருவடி களுக்கே உரியதாகச் செய்தருளினாய். எனது ஐம்பொறியறிவும் உன்னையே துய்க்கும்படி எழுந்தருளி என்னை ஆட்கொண்டு, எனதுள்ளத்தின் கண்ணே புகுந்த அன்புமயமாகிய  ஞானப் பெருங்கடலே, கேடும் ஆக்கமும் இல்லாத இரண்டும் கெட்டவனாகிய இவ்வடியவனுக்கு நின்னைத் தந்தருளினை, உன் பெருமைதான் என்னே! உன்னை போற்றி வாழ்த்துகிறேன்.     










தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Friday, March 8, 2019

மார்ச்-8 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

   
          
           விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
           உண்ணிய புகிலவை யொன்றுமில்லையாம்
           பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
           நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே.

              விண்ணளவு உயரத்திற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தாலும், அதனை எரிக்க சிறு பொறி போதும்; எரித்து அழித்துவிடும். அதுபோல, பல பிறவிகளில் செய்த வினை மூட்டைகளாகிய பாவங்கள் நம்மைத் தொடர்ந்து பற்றித் துன்புறுத்தும் போது, அப்பாவங்களை சுட்டெரிப்பதற்கு நமச்சிவாய என்ற ஒரு மந்திரம் போதும்.


திருவாசகம்

       முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
  பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
   தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
       என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை
  அன்னானை அம்மானைப் பாடுதும்காண் அம்மானாய்.

      அயன், திருமால், ருத்திரன் என்ற மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவனை, எல்லாப் பொருளும் தானேயாயும் அவற்றிற்கு முன்னவனாயும், பின்னவனாயும் உள்ளவனை, சடை பிறை முதலிய தலைக்கோல முடையவனை, திருப்பெருந்துறை வேந்தனை, பரவெளியுடையானை, மாதொரு பாகனை திருவானைக்கா உடையவனை, தென்பாண்டி நாட்டிற்கு உடையவனை, என் உயிருக்கு இனியவனை, அமுதனைய என் அப்பனைப் பாடி ஆடுவோம்.













தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning


Thursday, March 7, 2019

மார்ச்-7 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

   
            
             முன்னம் அடியேன் அறியாமையினால்
                 முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
             பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்
                 சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
             தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ
                 தலையாயவர் தம்கடன் ஆவதுதான்
             அன்ன நடையார் அதிகைக் கெடில
                 வீரட்டானத்துறை அம்மானே.

     வீரட்டானத்தில் வீற்றிருக்கும் பெருமானே! முன்பு, அறியாமையால் இருந்தேன். அப்போது எனக்குச் சூலை தந்து, துன்பப்படுத்தி, என்னை நலியுமாறு செய்தீர். இப்போது நான் தேவரீருக்கு ஆட்பட்ட அடிமையானேன். அப்பிணி என்னைச் சுடுகின்றது. தலைவராகிய தேவரீர், அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பதன்றோ செய்யத் தகுந்த செயல்;. அதனைப் புரிந்தருளும் வகையில் சூலை நோயைத் தீர்த்தருள்க.

திருவாசகம்
    
     கையார் வளை சிலம்பக் காதர் குழைஆட
     மையார் குழல்புரளத் தேன்பாய வண்டுஒலிப்பச்
     செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
     கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
     மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
     ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

    திருவிளங்கும் செம்மேனியனை, திருநீறு அணிந்திருப்பவனை, தானே முழு முதலானவன் ஆதலின் எவரையும் வணங்கக் கைகளைக் குவிக்காதவனை, எங்கும் நிறைந்து இருப்பவனும் அன்பர்க்கு உண்மையாய் விளங்குபவனும், அன்பிலாதவர்க்கு விளங்காத அறிவனை, திருவையாற்றில் வீற்றிருக்கும் தேவனைப் பாடிப் பரவுவோமாக.     











தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Wednesday, March 6, 2019

மார்ச்-6 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

        
         கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி
               ஆடல்கவின் எய்தி அழகார்
         மலையின் நிகர் மாடம் உயர்நீள் கொடிகள்
               வீசுமலி மாகறல் உளான்
         இலையின் மலிவேல் நுனைய சூலம் வலன்
               ஏந்தி எரிபுன் சடையினுள்
         அலை கொள்புனல் ஏந்து பெருமான் அடியை
               ஏத்த வினை அகலுமிகவே.

     பல கலைகளின் ஒலியும், பெண்கள் பாடல் ஒலியும், ஆடல் ஒலியும்கொண்டு விளங்குகின்ற பெரியமாடங்களின்  மெல் நீண்டகொடிகள் வீச திகழ்வது திருமாகறல் என்னும் பதி. அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான,; கூர்மையான சூலப்படையை வலக்கையில் ஏந்தி, நெருப்பு போன்ற சிவந்த சடையின் மேல் அலை வீசுகின்ற கங்கையை தரித்தவர்;. அப்பெருமானின் திருவடியைப் புகழ்ந்து வழிபட வினைகள் யாவும் நீங்கும்.

திருவாசகம்
    
     நெறிசெய்தருளித் தன் சீரடியார் பொன்னடிக்கே
     குறிசெய்து கொண்டென்னை ஆண்ட பிரான் குணம் பரவி
     முறிசெய்து நம்மை முழுதும் உடற்றும் பழ வினையைக்
     கிறி செய்தவா பாடிப் பூவல்லி கொய்யாமோ.

    தனது சிறந்த அடியார்களின் திருவடிகளுக்குத் தொண்டு செய்ய என்னை இலக்காக்கி, வழிகாட்டி என்னை ஆண்ட பிரான், நம்மைச் சுற்றி நின்று துன்பம் தரும் பழவினைகளைப்  பொய்யாக்குகிறேன் என்று முறிச்சீட்டு எழுதிக் காத்த முக்கண்ணன்அந்த  முதல்வனின் புகழ்பாடிப் பூக்கொய்து அவனது பொன்னடிகளைப் போற்றுவோம்.











தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Tuesday, March 5, 2019

மார்ச்-5 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


     மலைபுரிந்த மன்னவன்றன் மகளை யோர்பால் மகிழ்ந்தாய்
     அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை யாரூரா
     தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
     நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 மலையரசன் மகளாகிய பார்வதியை இடப்பாகம் கொண்டு மகிழ்ந்தாய், கங்கையை சடையில் தாங்கிய சடையையுடைய திருவாரூரா, பிரமகபாலம் ஏற்று ஊர் தோறும் பலிகொண்டவரே, தலைவரே, உன் திருவடியை எண்ணுபவரது   துன்பங்களை நீக்குவீராக.

திருவாசகம்
  
  பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்
 உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்
 துன்பமே துடைத்து எம்பிரான்
           உணக்கு இலாதது ஓர் வித்து மேல்
     விளையாமல் என் வினை ஒத்தபின்
 கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து
               காட்டினாய் கழுக்குன்றிலே.


      திருப்பெருந்துறை அண்ணலே, எவரிடத்தும் மாறுபாடில்லாத உனது நினைவில் திளைத் திருப்போர்களுக்கு துன்பமே இல்லைஒப்பிலாத இன்பமே உண்டாகும்காய்தல் உவத்தல் அற்ற மனப்பக்குவம் நான் அடைய அருட் செய்து என்னைப் பிறவாமல் காத்தருளிய பெருமானே, திருக்குழுக்குன்றத்திலே வந்து உனது திருக்கோலம் காட்டியருளினாய். உன் அன்புதான் எத்துணை உயர்ந்தது.














தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Monday, March 4, 2019

மார்ச்-4 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

   
           
            நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து
            அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
            தக்க வானவராத் தகுவிப்பது
            நக்கன் நாமம் நமச்சிவாயவே.


   ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தழுத்தானது, உள்ளம் நெகிழ்ந்து உருகி ஓதப் பெறுவதாகும். மற்றும், உருத்திராக்க மாலை கொண்டு மணிகளை உருட்டிச் செபித்து மொழியப் பெறுதலும், கையில் உள்ள விரற்கோடுகளைக் கொண்டு எண்ணி மொழியப் பெறுதலும் உடையது. இத்தகைய மாண்பில் திருவைந் தெழுத்தினை ஓதுபவர்கள், தேவர்களாகும் தகுதியைப் பெற்று விளங்குவார்கள்.


திருவாசகம்
            
          மாவார ஏறி மதுரை நகர் புகுந்து அருளித்
          தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
          கோவாகி வந்து எம்மைக் குற்றேவல் கொண்டருளும்
          பூவார் சுழல் பரவிப் பூவல்லி கொய்யாமோ.


  குதிரை மீதேறி அமர்ந்து, மதுரைப் பெருநகர் புகுந்து, தன் பேரோளித் திருவடிவு விளங்கத் தோன்றிய பெருந்துறைப் பெருமான் வந்து நம்மைப் பணி கொண்டருளுவதற்கு ஏதுவாய் மலர் போன்ற அவனது திருவடிகளை மண மலர்கள் பறித்து இட்டு வாழ்த்தி வணங்குவோம்.








தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Sunday, March 3, 2019

மார்ச்-3 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


          
           அரக்கரனார் அருவரை எடுத்தவன் அலறிட
           நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
           கருக்குவாள் அருள் செய்தான் கழுமல வளநகர்ப்
           பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

              அரக்கனாகிய இராவணன், ஈசன் பொருந்தி மேவும் பெருமையுடைய திருக்கயிலையை எடுத்தான்; அவன் அலறித் துடிக்குமாறு, ஈசன் தனது திருப்பாத விரலால் நெருக்கினார். பின்னர், அந்த அரக்கன் நீண்டு இனிமை தரும் யாழ் மீட்டிப் பாட, கூர்மையான வாளினை அருள் செய்தார். அப்பெருமான் கழுமல வளநகரில் விளங்குபவர். அப்பெருந்தகை, பெருகிச் சேரும் அன்பினளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருக்கின்றார்.

திருவாசகம்
      
     கேட்டாயோ தோழி கிறி செய்தவாறு ஒருவன்
     தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
     காட்டாதன வெல்லாம் காட்டிச் சிவம் காட்டித்
     தாள் தாமரை காட்டித் தன்கருணைத்தேன் காட்டி
     நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடு எய்த        
     ஆள் தான்கொண்டு ஆண்டவா பாடுதும்காண் அம்மானாய்.


      தீட்டிய கதை பொருந்திய மதில்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைக் கோயிலில் குடி கொண்டிருக்கின்ற தென்னவனாம் சிவபெருமான் செய்த மாயத்தை நீ அறிவாயோ தோழி! காணுதற்கரிய உண்மைகளை யெல்லாம் காணுமாறு செய்தான்எங்கும் நிறைந்த ஒரே பொருளாக அவன் காட்சி தந்தான்தனது திருவடித் தாமரைகளையும் காட்டினான்ஊலகினர் நம்மை இகழ்ந்து சிரிக்க, நாம் மேலான வீட்டின்பத்தை அடைய தனது கருணையெனும் தேன்காட்டிச் சிவபரம் பொருளும் காட்டி நம்மை ஆட்கொண்ட அண்ணலைப் பாடுவோம்.








தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Saturday, March 2, 2019

மார்ச்-2 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

   
     
      ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
      பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்
      கூர்மழு ஒன்றால் ஒச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
      தாமநற் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

      பசுக்கள் மிகுதியாகத் தரும் பாலையும், நெய்யையும் சண்டீசர் சிவபெருமானின் உருவத் திருமேனியை முழுக்காட்டப் பயன்படுத்தி அர்ச்சனைகள் செய்தார். பூக்கள் மிகுந்த கொன்றை மாலையைச் சூட்டினார், சண்டீசர். இச்செயல்களை அவருடைய தந்தை பொறுக்காத நிலையில், தந்தையின் தாளைக் கூரிய மழுவாயுதத்தால் வெட்டினார். திருச்சாய்க் காட்டில் உறையும் சிவபெருமான், தம்முடைய குளிர்ந்த சடையில் கொண்ட கொன்றை மாலையைச் சண்டீசருக்கு வழங்கினார்.   

திருவாசகம்


 பிட்டு நேர்பட மண் சுமந்த
        பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத
           சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
  சிட்டனே சிவலோகனே சிறு
     நாயினுங் கடையாயவெங்
          கட்டனேனையும் ஆட்கொள்வான்  வந்து
       காட்டினாய் கழுக்குன்றிலே.

      பிட்டு வாணிச்சியின் பிட்டுக்காக மண்சுமந்து திருவிளையாடல் புரிந்த திருப்பெருந்துறை உறையும் பித்தனே, உனது கட்டு திட்டத்திற்கு ஒத்து வராத குணமுடைய யான் உன்னை அடையமாட்டேன்செம்மை சேர் சிவலோக நாயகனே, இழிந்த நாயினுற் கீழ்ப்பட்டவனும் கொடிய துன்பத்தை அனுபவிப்பனும் ஆகிய என்னையும் ஒரு பொருளாகக் கருதி அடிமை கொள்ளும் பொருட்டு திருக்கழுக்குன்றத்தில் உன் திருக்கோலம் காட்டினாய்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Friday, March 1, 2019

மார்ச்-1 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

          
          உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
               உமையோடும் வெள்ளை விடைமேல்
          முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
               உளமே புகுந்த அதனால்
          திருமகள் கலையதூர்தி செயமாதுபூமி
               திசைதெய்வ மான பலவும்
          அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
               அடியா ரவர்க்கு மிகவே.     

       சிவபெருமான், அழகு பொருந்திய பவளம் போன்ற தன் உடம்பில் திருநீற்றை அணிந்து தன் சடை முடிமேல் மணமிக்க கொன்றை, சந்திரன் இவற்றைச் சூடி உமாதேவியோடு காளை வாகனத்தில் ஏறி என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருக்கின்றார். ஆகவே, இலக்குமி, கலைமகள், துர்க்கை, பூமி, திசை தெய்வங்கள் ஆகிய பலவும் முறைப்படி மிகுதியாக நன்மையை செய்வனவேயாகும்.

திருவாசகம்
  
   உரைமாண்ட உள்ளொளி உத்தமன் வந்து உளம்புகலும்
     கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
     இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
     துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ.



சொல்லின் அளவு கடந்து, உயிர்க்கு உள்ளீடாயுள்ள எம் முதல்வன் எனது நெஞ்சத்தே புகுந்த போது, கரையற்ற கடலான உலகப்பற்று ஒழிந்தது. தமக்குரிய உணவு ஒழிந்து போகக் கண்ட ஐம்பொறிகள் என்னும் பறவைகள் ஓட்டமெடுத்தன. ஆவை கதியொழிந்த விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோம்.









தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  

Thevaram Thiruvasagam Song with Meaning