தேவாரம்
விண்ணுற அடுக்கிய விறகின்
வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்றுமில்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற
பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே.
விண்ணளவு உயரத்திற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி
வைத்தாலும், அதனை எரிக்க சிறு
பொறி போதும்; எரித்து அழித்துவிடும்.
அதுபோல, பல பிறவிகளில் செய்த
வினை மூட்டைகளாகிய பாவங்கள் நம்மைத் தொடர்ந்து பற்றித்
துன்புறுத்தும் போது, அப்பாவங்களை சுட்டெரிப்பதற்கு
நமச்சிவாய என்ற ஒரு மந்திரம்
போதும்.
திருவாசகம்
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை
வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்கு
இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதும்காண்
அம்மானாய்.
அயன், திருமால், ருத்திரன்
என்ற மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவனை, எல்லாப் பொருளும் தானேயாயும்
அவற்றிற்கு முன்னவனாயும், பின்னவனாயும் உள்ளவனை, சடை பிறை முதலிய
தலைக்கோல முடையவனை, திருப்பெருந்துறை வேந்தனை, பரவெளியுடையானை, மாதொரு பாகனை திருவானைக்கா
உடையவனை, தென்பாண்டி நாட்டிற்கு உடையவனை, என் உயிருக்கு இனியவனை,
அமுதனைய என் அப்பனைப் பாடி
ஆடுவோம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment