Saturday, March 2, 2019

மார்ச்-2 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

   
     
      ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
      பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்
      கூர்மழு ஒன்றால் ஒச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
      தாமநற் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

      பசுக்கள் மிகுதியாகத் தரும் பாலையும், நெய்யையும் சண்டீசர் சிவபெருமானின் உருவத் திருமேனியை முழுக்காட்டப் பயன்படுத்தி அர்ச்சனைகள் செய்தார். பூக்கள் மிகுந்த கொன்றை மாலையைச் சூட்டினார், சண்டீசர். இச்செயல்களை அவருடைய தந்தை பொறுக்காத நிலையில், தந்தையின் தாளைக் கூரிய மழுவாயுதத்தால் வெட்டினார். திருச்சாய்க் காட்டில் உறையும் சிவபெருமான், தம்முடைய குளிர்ந்த சடையில் கொண்ட கொன்றை மாலையைச் சண்டீசருக்கு வழங்கினார்.   

திருவாசகம்


 பிட்டு நேர்பட மண் சுமந்த
        பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத
           சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
  சிட்டனே சிவலோகனே சிறு
     நாயினுங் கடையாயவெங்
          கட்டனேனையும் ஆட்கொள்வான்  வந்து
       காட்டினாய் கழுக்குன்றிலே.

      பிட்டு வாணிச்சியின் பிட்டுக்காக மண்சுமந்து திருவிளையாடல் புரிந்த திருப்பெருந்துறை உறையும் பித்தனே, உனது கட்டு திட்டத்திற்கு ஒத்து வராத குணமுடைய யான் உன்னை அடையமாட்டேன்செம்மை சேர் சிவலோக நாயகனே, இழிந்த நாயினுற் கீழ்ப்பட்டவனும் கொடிய துன்பத்தை அனுபவிப்பனும் ஆகிய என்னையும் ஒரு பொருளாகக் கருதி அடிமை கொள்ளும் பொருட்டு திருக்கழுக்குன்றத்தில் உன் திருக்கோலம் காட்டினாய்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment