Sunday, December 30, 2018

ஜனவரி 1 - தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam


தேவாரம்

           வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
              மிகநல்ல வீணை தடவி
           மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்      
              உளமே புகுந்த அதனால்
           ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
              சனிபாம் பிரண்டும் உடனே
           ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
              அடியா ரவர்க்கு மிகவே.

     மூங்கில் போன்ற தோள்களையுடைய உமா தேவியை இடப்பாகம் கொண்டவனும், உலகம் வாழும் பொருட்டு நஞ்சினைக் கழுத்தில் அடக்கியவனும், இவ்வுலகைப் படைக்கும் பொருட்டு வீணை வாசித்து நாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கின்றவனும், மூன்றாம் பிறைச் சந்திரனையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனுமாகிய சிவபெருமான் என் உள்ளத்தில் குடி கொண்டிருப்பதால், ஞாயிறு முதலிய ஏழு நாட்களும் அவற்றோடு ராகு, கேது சேர்ந்த ஒன்பது கோள்களும் துன்பம் நீக்கி நன்மையைச் செய்வனவாம். அடியார்கள் யாவர்க்கும் அவை மிகுதியாக நன்மையே செய்வனவாகும்.

திருவாசகம்
             
       எம்பிரான் போற்றி வானத்து அவர் அவர் ஏறு போற்றி
       கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண்ணீற போற்றி
       செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம்பலவ போற்றி
       உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி
   
          எமை ஆளும் அண்ணலே வணக்கம். விண்ணுளோர்க்கு வளம் தந்து அருளும் வேந்தனே வணக்கம். மங்கை உமையவளை ஒரு கூறாகக் கொண்ட மாப்பெருங் கருணையனே, வெண்ணீறு அணிந்தவனே, வீடுடையோனே, செஞ்சுடரே, தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்தக் கூத்தனே, உயர்தனிப் பரம்பொருளே உன்னை வணங்குகிறேன். என்னை அடிமை கொண்டு ஆளுகின்ற ஒப்பற்ற தெய்வமே உன்னை வணங்குகிறேன்.


தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam