Friday, January 25, 2019

ஜனவரி-25 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

    அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
    உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
    கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.

    முன்செய்த வினையின் பயனாக இப்போது யாம் துன்பம் அடைகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனினும் அதிலிருந்து விடுதலை பெற்றுக் கடைத்தேறும் வழியை நாடிச் செல்லாமல் இருப்பது உமக்குக் குறைவு தரும் அல்லவா? எனவே, அக்குறையைப் போக்க கைகளால் செய்யும் செயலாகிய மலர் பறித்தல், கைகுவித்து வணங்குதல் போன்ற செயல்களைச் செய்து எம்முடைய தலைவனாகிய ஈசன் திருவடியைப் போற்றுவோமாக. அவ்வாறு செய்துவரும் அடியவர்களை முன் வினையானது தீண்டாதுதிருநீலகண்டம் வந்து அவ்வினையை நிர்மூலமாக்கும்

திருவாசகம்

       தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை
            சங்கரா ஆர் கொலோ சதுரர்
       அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
            யாது நீ பெற்றது ஒன்று என்பால்
       சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
            திருப்பெருந்துறை உறை சிவனே
       எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
   யான் இதற்கு இவன் ஓர் கைம்மாறே.
 
                எனது உள்ளத்தையே நீ உறையும் கோயிலாகக் கொண்டருளிய எந்தன் 
இறைவா, திருப்பெருந்துறைப் பெருமானே! உன்னை எனக்குத் தந்தாய். அதற்குப் பதிலாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய். சங்கரா, நம்மிருவரில் யார் கெட்டிக்காரார். உன்னையடைந்ததால் நான் முடிவிலாத இன்பம் பெற்றேன். என்னால் நீ பெற்றது என்ன? ஒன்றுமில்லையே. அப்பனே, ஆண்டவனே, எனது உடலில் இடங் கொண்டவனே, உனது அருட் செய்கைக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  

Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment