தேவாரம்
சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு
பால்
முறையாலே உணத் தருவன்; மொய்பவளத்தொடு
தரளம்
துறையாரும் கடல் தோணிபுரத்து ஈசன்
துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கு ஒருகால் பேசாயே.
சிறகுகளை விரிக்கும் இளங்கிளியே! இங்கு வா, உனக்காகத்
தேனும் பாலும் உண்ணத் தருவேன்.
பவளமும் முத்தும் செறிந்த கடலின் துறையமைந்த
தோணிபுரத்தின் ஈசன், அவன் ஒளிவீசும்
இளம் பிறையைத் தலையில் சூடியவன். அவனுடைய
திருநாமத்தை எனக்காக ஒரு முறை
கூறுவாயாக.
திருவாசகம்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந் திறல் அரும்
தவர்க்கு அரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே சிவபெருமானே
இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே.
கருணை ஒளி வீசும்
சுடரொளியே, கனிந்த நல்ல பழம்
ஒத்தவனே, பேராற்றல் கொண்ட அருந்தவத்தினர்க்கு அரசே,
மெய்ப்பொருள் விளக்கும் மெய்ஞ்ஞான நூல் அனையவனே, புகழ்தலைக்
கடந்த சிவ பரம்பொருளே, யோகத்தார்
பெரும்பேறே, தெளிந்த அடியாரிடத்துத் தங்கிய
அருட் செல்வமே, அறியாமை நிறைந்த இவ்வுலகத்தே
உன்னை உறுதியாகப் பற்றினேன். இனி;
நீ எழுந்தருள்வது எங்கே? எமை ஆண்டருள்க
இறையே!
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment