Friday, February 1, 2019

பிப்ரவரி-1 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


       என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
                 எருதேறி யேழையுடனே
       பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
                 உளமே புகுந்த அதனால்
       ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டொ டாறும்
                 உடனாய நாள்க ளவைதாம்
       அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
                 அடியா ரவர்க்கு மிகவே.

    சிவபெருமான், எலும்பு, பன்றியின் கொம்பு, ஆமையின் ஓடு இவை மார்பில் விளங்க, காளை வாகனத்தின் மேல் உமாதேவியுடன் பொன்னிறமான ஊமத்தமலர், கங்கை இவற்றைச் சூடி வந்து என் உள்ளத்தில் புகுந்ததால் பயணத்திற்கு ஆகாதன எனக்கூறப்பட்ட நாட்கள் நன்மையே செய்வனவாம்.
      அந்நாட்கள்:- அசுவினி முதலாக எண்ணப்பட்ட 9 ஆவது ஆயில்யம். (ஒன்பதொடு ஒன்று) 10- மகம்.(ஒன்பதொடு ஏழு)16 விசாகம். 18-கேட்டை. 6-திருவாதிரை. மற்று உடனாயநாட்கள் 2-பரணி, 3-கார்த்திகை, 11-பூரம், 14-கார்த்திகை, 15-சுவாதி, 20-பூராடம், 25-பூரட்டாதி என்னும் 13 நாட்கள்

திருவாசகம்
    
     எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
       தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃதிலான்
  முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
  சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே.


                                எனது அப்பனாயும், அன்னையாயும் இருக்கும் எம்பிரான் பிற எல்லோருக்குமே தாயும் தந்தையும் ஆவான்தலைவனும் ஆவான்தனக்குத் தாயும் தந்தையும் தலைவனும் இல்லாத தான் தோன்றி. சொல்லாலன்றி மனத்தாலும் அறிவதற்கரிய முத்திப் பெருஞ் செல்வனாம் எம் ஈசன் எனக்குப் பக்குவம் ஏற்படும் முன்பே தன் பெருங்கருணையால் என் உள்ளத்தே புகுந்தருளினான்அவனை வாயாற வாழ்த்தி வணங்குவேன்.



தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment