தேவாரம்
பொய்யா நாவதனால் புகழ்வார்கள்
மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும்
விளக்கே ஒத்த தேவர்பிரான்
செய்யானுங் கரிய நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான்
கழிப்பாலையதே.
பொய் சொல்லாத நாவினால்
புகழ்கின்றவர்களின் மனத்தின் உள்ளே உண்மையாகவே நின்று
எரியும் திருவிளக்கைப் போன்றவன் சிவபெருமான். சிவந்த நிறமுடைய நான்முகனும்,
கரிய நிறமுடைய திருமாலும் தேடிக் காணப் பெறாதவன்.
அத்தகைய பெருமான், மைபூசிய கண்களைக் கொண்ட
உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் திருத்தலம் கழிப்பாலையாகும்.
திருவாசகம்
பத்திமையும்
பரிசும் இலாப்
பசு பாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன் என
என்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தம் எனும் திண்
கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார்
விளையாடல்
விளங்கு தில்லை கண்டேனே.
எனது பசுத் தன்மையையும்,
பாசத்தையும் நீக்கியருளி, அன்பும், பண்பும் இல்லாத பித்தன்
இவன் என்று என்னை உலகினர்
கூறும்படி செய்வித்து, அவனது திருவடியை விட்டு
நான் விலகிப் போகாதவாறு நினைவு
என்னும் வலிய கயிற்றினால் என்னைத்
தன் திருவடியோடு சேர்த்துப் பிணைத்த ஆனந்தக் கூத்தனின்
திருவிளையாடலைத் தில்லைத் திருச்சபையில் கண்டு களிப்படைந்தேன்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment