Monday, February 11, 2019

பிப்ரவரி-11 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


            கூற்றாயின வாறு விலக்ககிலீர்
                  கொடுமைபல செய்தன நானறியேன்
            ஏற்றார்யடிக்கே இரவும் பகலும்
                  பிரியாது வணங்குவன், எப்பொழுதும்
            தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
                  குடரோடு துடக்கி முடக்கியிட
            ஆற்றேன் அடியேன், அதி கைக்கெடில
                  வீரட்டானத்துறை அம்மானே.

     திருவதிகையில் கெடில நதியின் பக்கத்தில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அழகிய தலைவனே! வினைப் பயனால் பிணியுற்றுத் துன்புறுதல் நியதியாயினும், அத்தகைய வினையானது யாதென அறியேன். அத்துன்பமானது, எத்தகைய தீர்வுக்கும் இடம் இன்றி என் உடலின்கண் குடரோடு சேர்ந்து வருத்துகின்றது. அப்பிணியானது கூற்றுவனைப் போன்று வருத்துகின்றது. என்னால் தாங்க முடியவில்லை. அதனை விலக்காதது ஏனோ! காளை வாகனத்தில் வீற்றிருப்பவரே! என்னைப் பீடித்துள்ள வயிற்று நோயைத் தீர்த்தருள்வீராக. நான் உமது திருவடிக்கே ஆளாக்கப்பட்டுத் தேவரீரைப் பகலிலும் இரவிலும் பிரிதல் இல்லாது வணங்குவேன்.

திருவாசகம்

      பேருங் குணமும் பிணிப்புறும் இப் பிறவிதனைத்
      தூரும் பரிசு துரிசு அறுத்துத் தொண்டர் எல்லாம்
      சேரும் வகையாற் சிவன் கருணைத் தேன் பருகி
      ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

    நாம, ரூபங்கள் எனப்படும் பேரும், பல்வகைக் குணங்களும் நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாகும். இப்பிறவி அழிந்து, மன மாசு அகற்றிய அடியார்கள் எல்லாம் ஜீவ போதத்தைக் களைந்து சிவானந்தத்தில் திளைத்து இருப்பது போல் நானும் இருக்கும் பொருட்டு தில்லைச் சிற்றம்பலவனின் திருவடிகளைப் பற்றினேன்.












தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning


No comments:

Post a Comment