Saturday, February 16, 2019

பிப்ரவரி-16 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


    
     கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
     உருவாய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனதருளால்
     திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
     தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே.

     திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருந்தருளும் அரனே! கருவில் இருந்த காலம் முதலே உன்னுடைய திருவடிகளையே நினைந்துருகும் கருத்துடையேன். வடிவமுற்று வந்த - பிறந்த - காலம் முதல் உன் நாமத்தையே நாவிற் சொல்லியவாறே வாழுகின்றேன். உன் அருளாலே நல்லுணர்வு வர வாய்குளிரசிவாய நமஎன்று திருவைந்தெழுத்தைச் சொல்லியே நீறு அணிகின்றேன். இவைகளையே சிறந்த தகுதிகளாகக் கொண்டு, பெருமானே! எனக்குச் சிவபேற்றையருளிக் காப்பாயாக!

திருவாசகம்
             
              கடலே அனைய ஆனந்தம்
         கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண
இடரே பெருக்கி ஏசற்று இங்கு
       இருத்தல் அழகோ அடி நாயேன்
  உடையாய் நீயே அருளுதி என்று
             உணர்த்தாது ஒழிந்தே கழிந்து ஒழிந்தேன்
  சுடரார் அருளால் இருள் நீங்கச்
      சோதீ இனித்தான் துணியாயே.


    ஐயனே, கடல் போன்ற பேரின்பத்தைக் கண்ணுற்ற அடியார்களெல்லாம் வலிதிற் பெற்று அனுபவிக்கவும் துன்பத்தையே பெருக்கி அடிமை நாயேன் இவ்வுலகில் சும்மா இருப்பது அழகாகுமோ! என்னை உடையவனாகிய நீயே நான் கேளாது அப்பேரின்பத்தைத் தருவாயென்று எண்ணி என் விருப்பத்தைத் தெரிவிக்காமல்  போய்க் கழிவுபட்டு விட்டேன். ஒளி வண்ணனே உனது அருட்சோதியால் எனது அறியாமை இருள் நீங்கும்படி செய்தருள்க.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment