Thursday, January 31, 2019

ஜனவரி-31 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

          இடரினுந் தளரினும் எனதுறு நோய்
          தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
          கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
          மிடறினில் அடக்கிய வேதியனே               
   இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
   அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

            பாற்கடலின்கண், அமுதத்தைக் கடைந்தெடுக்கும்போது தோன்றிய நஞ்சினை கழுத்தில் அடக்கி வைத்துக் காத்தருளிய வேத நாயகனே! எனக்குத் துன்பம் வந்தாலும், மனம் தளர்ச்சியடைந்தாலும், எனக்கு நோய்கள் தொடர்ந்து வந்தாலும், உனது பாதத்தையே தொழுது வணங்குவேன்.
    அவ்வாறு இருக்க எமக்குத் தேவைப் படுகின்ற பொருளைத் தந்து அருள் புரியவில்லையானால் அது உமது திருவருளுக்கு அழகாகுமோ?

திருவாசகம்
         
          மாயனே மறி கடல் விடம் உண்ட
    வானவா மணி கண்டத்து எம் அமுதே
          நாயினேன் உனை நினையவும் மாட்டேன்
   நமச்சிவாய என்று உன்னடி பணியாப்
          பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
    பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனேயோ
          சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.

                          மாயையின் தலைவனே, கடலில் எழுந்த நஞ்சை அருந்தின தேவனே, நீலமணி போன்ற நஞ்சு தங்கிய திருக்கழுத்தை உடையவனே, எங்கள் அருமருந்தே, பிறை நிலவைச் சூடிய தலைக்கோலம் உடையவனே, திருப்பெருந்துறையில் வீற்றிருந்த சிவபெருமானே, உன்னடியவனாகிய நான் தூரத்தே நின்று துயருற்றுக் கதறுவது சரியோநாயனைய நான்நமச்சிவாயஎன்று கூறி உன்னடியை எண்ணவும் மாட்டாத பேயனாகிலும் எனக்கு உனது சீர்மிகுந்த ஞான நெறியைக் காட்டியருள்வாய்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  

Thevaram Thiruvasagam Song with Meaning

Wednesday, January 30, 2019

ஜனவரி-30 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்
       
       மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
       எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
       கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
       பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!


      கழுமலம் என்னும் பெயருடைய சீர்காழியாகிய வளமிக்க நகரில், பெருமை மிக்க சிவபெருமான், பெண்களில் உயர்ந்த உமாதேவியாரோடு வீற்றிருக்கின்றார். அவரை நாள்தோறும் வழிபட்டு வந்தால், இவ்வுலகில் நல்லமுறையில் வாழலாம். நற்கதியாகிய முக்தியையும் குறைவில்லாமல் அடையலாம்.

திருவாசகம்
                
           
            பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
            குரவுவார் குழல் மடவாள் கூறுடையாள் ஒருபாகம்
            விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
            அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே.



                வானவர்கள் உன்னை வாழ்த்துகின்றனர்அறிவுக்கு முதலாகிய நான்மறைகளும் உன் புகழையே ஒலிக்கின்றனநறுமணம் பொருந்திய கூந்தலையுடைய உமையம்மை உன் இடப்பாகத்தே இடம் கொண்டிருக்கிறாள்உண்மை அன்புடைய உனது அடியவர்கள் தொகுப்புத் தொகுப்பாக உன்னை வழிபடக் கூடுகின்றனர்யாரும் அறிதற்கு அரியவனே, கழல்கள் ஒலிக்கின்ற உனது திருவடிகளை இவர்களில் யார் தான் கண்டிருக்கின்றனர்ஐயனே, அருள் காட்சி தந்தருள்க.



தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Tuesday, January 29, 2019

ஜனவரி-29 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


      
       நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள் ளேறு
       ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
       சென்றடையாத திருவுடையானைச் சிராபப்ள்ளிக்
       குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.

  நன்மை உடையவனை, தீமையில்லாதவனை, வெண்மையான காளை வாகனம் உடையவனை, உமாதேவியை இடப்பாகம் கொண்டவனை, இயல்பாகவே செல்வத்தை யுடையவனை, திருச்சிராப்பள்ளி மலைமேல் இருப்பவனைப் போற்றி வழிபட என் உள்ளம் மகிழ்ச்சியடையும்

திருவாசகம்
               
                நாடகத்தால் உன் அடியார்
         போல் நடித்து நான் நடுவே
                வீடகத்தே புகுந்திடுவான்
          மிகப்பெரிதும் விரைகின்றேன்
                ஆடகச் சீர் மணிக்குன்றே
          இடையறா அன்பு உனக்கென்
                ஊடகத்தே நின்றுருகத்
       தந்தருள் எம் உடையானே.


                                என்னை உடையவனே, உனது அன்பர்கள் நடுவில், அன்பில்லாதவனான நான், அன்புடையவன்  போல் வாஞ்சனையாக நடந்து காட்டி, அவர்களோடு யானும் முத்திபேறு அடைய மிக அதிகமாகத் துரிதப்படுகின்றேன்பொன் நிறம் பொருந்திய மாணிக்க மலை போன்ற ஐயனே, உன்பால் எப்போதும் குறைவுறாத அன்பினால் என் நெஞ்சம் உருக உதவியருள்க.




தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Monday, January 28, 2019

ஜனவரி-28 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

       திங்களுச்சி மேல்விளங்கும் தேவன், இமையோர்கள்
       எங்களுச்சி யெம்மிறைவன் என்றடியே யிறைஞ்சத்
       தங்களுச்சி யால்வணங்குந் தன்னடியார் கட்கெல்லாம்
      நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

     திருநள்ளாற்று சிவபெருமான், உச்சியில் சந்திரனை சூடியவர். அவரைத் தேவர்கள் உச்சிமேல் வைத்து வணங்குவர். தலையால் வணங்கும் அடியவர்களுக்கெல்லாம் மேன்மையைத் தருபவர்.


திருவாசகம்
             
               நாயிற் கடையாம் நாயேனை
       நயந்து நீயே ஆட்கொண்டாய்
               மாயப் பிறவி உன்வசமே
        வைத்தி;ட் டிருக்கும் அதுவன்றி
               ஆயக் கடவேன் நானோ தான்
      என்னதோ இங்கு அதிகாரம்
               காயத் திடுவாய் உன்னுடைய
         கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.


                      நெற்றிக் கண் கொண்ட நீலகண்டனே, நாயினுங் கடைப்பட்ட அடியேனை விரும்பி ஆட்கொண்டவன் நீயேஅதனால் எனக்கு உயர்வு வந்ததுஎன் பிறவியை உன்பால் ஒப்படைத்தேன்இனி நீ என்னை எந்நிலையில் வைப்பினும் எனக்குச் சம்மதமேஆராய்ந்து பார்க்கும் உரிமை எனக்கில்லைஅதற்கான அதிகாரமும் எனக்கில்லைஎனக்கு மீண்டும் உடல் வாழ்க்கை தருவதோ அன்றி உன்னுடைய திருவடிப்பேறு அருள்வதோ உனது திருவுளப்பாங்கு. இந்தப் பக்குவ நிலையில் இருந்து அடியேன் என்றும் நீங்காது இருக்க அருள்புரிய வேண்டும் இறைவா.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Sunday, January 27, 2019

ஜனவரி-27 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

    
     மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
     பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனை பேசினல்லால்
     குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
     நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

          “நெடுங்களம் என்னும் பதியில் விளங்கும் பெருமானே!
வேதத்தலைவரே, தோல் ஆடையரே, சடைமேல் பிறையுடையவரே, தலைமாலையுடையவரேஎன்று புகழ்வதன்றி வேறொன்றும் அறியாத அடியவர், குறையுடையவராயிருந்தாலும், அவர்களது குற்றங்களை எண்ணிப் பார்க்க மாட்டீர். அத்தகைய உயர்ந்த வழிபாடு உடையவர்களது துன்பங்களை நீக்குவீராக.


திருவாசகம்
             
        
         வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்லினைப்பட்டு
         ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே
         சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
         வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே.



                                பேரி;ன்ப வாழ்வு பெற்று வாழக் கருதாத பேதை மனமே, நீ வீணே உலக வாழ்வில் பற்று வைத்து வினையில் அகப்பட்டுத் துயரத்தில் அழுந்துகின்றாய், அவ்வாறு நீ அழுந்தாதவாறு காக்க வல்ல கடவுளை நினைந்து வழிபடாமல்உனக்குக் கெடுதியையே உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறாய்உனக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும் நீ அதனைக் கேளாது துன்பக் கடல் என்னும் பெருவெள்ளத்தில் வீழ்ந்து அழிகின்றாய் என் செய்வது. எம்பெருமான் துணையை நாடுக.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Saturday, January 26, 2019

ஜனவரி-26 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்



          துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
          நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
          வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்த கூற்று
          அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

    உறங்கும் போதும், உறங்காது விழித்திருக்கும் போதும், நெஞ்சம் கசிந்து உருகுமாறு, அஞ்செழுத்தை நினைத்துப் போற்றுக. இதனை நாள்தோறும் புரிவீராக. மார்க்கண்டேயர், நெஞசில் வேறு எண்ணம் இன்றி ஈசனையே நினைத்துத் திருவடியை வாழ்த்திப் போற்றிய காலத்தில், உயிரைக்கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தது திருவைந்தெழுத்தே.

திருவாசகம்

               ஈசனே என் எம்மானே
      எந்தை பெருமான் என்பிறவி
               நாசனே நான் யாதும் ஒன்று
     அல்லாப் பொல்லா நாயான
               நீசனேனை ஆண்டாய்க்கு
       நினைக்கமாட்டேன் கண்டாயே
               தேசனே அம்பலவனே
       செய்வது ஒன்றும் அறியேனே.


                இறைவனே, எனது தலைவா, என் அப்பனாகிய அருட்சுடரே, என் பிறப்பினை ஒழிப்பவனே. ஒன்றுக்கும் பயனற்று, உடல் உணர்வில் ஒன்றிக் கிடந்த நாயினேனைப் பரபோதம் அடையப் பெற்றவனாக்கினாய்அதன் பிறகாகிலும் நீ செய்த பேருதவியை நான் நினைந்திருக்க வேண்டும் நீசனாகிய நான் அதை நினைந்தேனில்லைஅம்பலவாணா, அறிவற்ற என்னை அறிவொளி காட்டி நீயே இயக்கியருள வேண்டும்.




தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Friday, January 25, 2019

ஜனவரி-25 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

    அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
    உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
    கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.

    முன்செய்த வினையின் பயனாக இப்போது யாம் துன்பம் அடைகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனினும் அதிலிருந்து விடுதலை பெற்றுக் கடைத்தேறும் வழியை நாடிச் செல்லாமல் இருப்பது உமக்குக் குறைவு தரும் அல்லவா? எனவே, அக்குறையைப் போக்க கைகளால் செய்யும் செயலாகிய மலர் பறித்தல், கைகுவித்து வணங்குதல் போன்ற செயல்களைச் செய்து எம்முடைய தலைவனாகிய ஈசன் திருவடியைப் போற்றுவோமாக. அவ்வாறு செய்துவரும் அடியவர்களை முன் வினையானது தீண்டாதுதிருநீலகண்டம் வந்து அவ்வினையை நிர்மூலமாக்கும்

திருவாசகம்

       தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை
            சங்கரா ஆர் கொலோ சதுரர்
       அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
            யாது நீ பெற்றது ஒன்று என்பால்
       சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
            திருப்பெருந்துறை உறை சிவனே
       எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
   யான் இதற்கு இவன் ஓர் கைம்மாறே.
 
                எனது உள்ளத்தையே நீ உறையும் கோயிலாகக் கொண்டருளிய எந்தன் 
இறைவா, திருப்பெருந்துறைப் பெருமானே! உன்னை எனக்குத் தந்தாய். அதற்குப் பதிலாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய். சங்கரா, நம்மிருவரில் யார் கெட்டிக்காரார். உன்னையடைந்ததால் நான் முடிவிலாத இன்பம் பெற்றேன். என்னால் நீ பெற்றது என்ன? ஒன்றுமில்லையே. அப்பனே, ஆண்டவனே, எனது உடலில் இடங் கொண்டவனே, உனது அருட் செய்கைக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  

Thevaram Thiruvasagam Song with Meaning

Thursday, January 24, 2019

ஜனவரி-24 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert

தேவாரம்


     
      சொற்றுணை வேதியன் சோதி வானவன்
      பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
      கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
      நற்றுணை யாவது நமச்சி வாயவே

      மந்திரச் சொற்களை ஆதாரமாக உடைய வேதத்தின் முதல்வன் சிவபெருமான். அப்பெருமான், சோதி வடிவாக விளங்குபவர்;. அவருடைய ஒளிமயமான அழகிய திருவடியில் நெஞ்சைப் பதித்துத் தொழுது ஏத்த நல்ல துணையாகி விளங்குபவர். கல்லில் கட்டிக் கடலில் தூக்கி எறியப்பட்டாலும், நமக்கு துணையாக நின்று காத்தருளுவது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்தாகும்.

திருவாசகம்

  முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
  பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
  உன்னைப் பிரானாகப் பெற்ற உன்சீர் அடியோம்
  உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
  அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
  சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
  இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
  என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


            பழமைக்குப் பழமையும், புதுமைக்குப் புதுமையுமான எங்கள் இறைவா! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உனது திருவடிக்கே உரியவராவோம்உன் அடியார்களின் பாதங்களை வணங்குவோம்இறையடியார்களாகிய நாங்கள் இறையடிவர்களையே கணவராகப் பெறவேண்டும் அவர்களோடு எல்லா விதத்திலும் இணைந்து பணி செய்வோம்ஒத்த கருத்துடையவர்களோடு இணைந்து வாழும் வாழ்க்கையை எங்களுக்குத் தந்தருள்க குறைவிலா நிறைவே அருள் செய்க.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning