Monday, January 14, 2019

ஜனவரி-14 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning


தேவாரம்


       
            பண்ணின்; நேர்மொழி மங்கைமார் பலர்
                 பாடியாடிய வோசை நாடொறுங்
            கண்ணின் நேர் அயலே பொலியும் கடற்காழிப்
            பெண்ணின் நேரொரு பங்குடைப் பெருமானை
                 எம்பெருமான் என்றென்றுன்னும்
            அண்ணலார் அடியார் அருளாலுங் குறைவிலரே.

     பண்ணிசை போல இனிதாகப் பேசும் பெண்டிர் பாடி ஆடி மகிழும் காட்சியும், ஓசையும், தினமும் விளங்கும் கடற்கரையை உடையது, சீர்காழி. இத்தலத்தில் பெண்ணொரு பாகனாய் விளங்கும் சிவபெருமானை, எம் தலைவன் என்று பாடி வணங்கிக் கருதும் அடியவர்கள் பொருட்செல்வத்துடன் அருட்செல்வமும் குறைவில்லாது பெறுவர்.

திருவாசகம்

சோதியே சுடரே சூழொளி விளக்கே
   கரிகுழற் பணை முலை மடந்தை
    பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
   பங்கயத்து அயனும் மால் அறியா
  நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
   ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
 அதெந்துவே என்று அருளாயே.


        ஒளி வடிவானவனே, ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடரானவனே, தன்னொளியுடைய விண்மீன்களாம் விளக்குகளானவனே, உமையவளின் திருமேனியில் பாதியைக் கொண்டவனே, பரமனே, பால் ஒக்கும் திருநீற்றை அணிந்தவனே, நான்முகனும் திருமாலும் அறியாத நீதி வடிவானவனே, சிறப்புமிகு திருப்பெருந்துறையின்கண் மலர் நிறைந்த குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த பெருமானே, அடியவன் உனை விரும்பியழைத்தால் அஞ்சாதே என்று உரைத்தருள்வாய்.



தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment