Friday, January 4, 2019

ஜனவரி 4 - தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam


தேவாரம்

   

               திரைகள் எல்லாம் மலரும் சுமந்து
         செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
       கரைகள் எல்லாம் மணிசேர்ந்து உரிஞ்சிக்
        காவிரி கால்பொரு காட்டுப் பள்ளி
      உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல
       உத்தமராய் உயர்ந்தார் உலகில்
       அரவமெல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு
        ஆட்செய்ய அல்லல் அறுக்கலாமே.

     காவிரியின் வாய்க்கால் பலவும் மலர்களைச் சுமந்தும், மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றைக் கொண்டு வந்தும் கரைகளி;ல் சேர்த்தவாறு ஊராய்ந்து செல்லும் திருத்தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி. இங்கு பாம்புகளை இடுப்பில் கட்டிய சிவபெருமானுக்கு, வேதம் முதலியவற்றின் பொருள் உணர்ந்தவராய், நல்ல உத்தமராய்த் தொண்டு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம் அல்லல் அகலும்.


திருவாசகம்
            
     போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்கு கின்றேன்
     போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிதொன்று இல்லை
     போற்றியோ நமச்சிவாய புறமெனைப் போக்கல் கண்டாய்
     போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி


         நமச்சிவாய என்னும் ஆதி மந்திரத்தின் வடிவானவனே, உன்னைப் போற்றுகிறேன். பாம்பணிந்த பரமனே, உலக வாழ்வில் நான் திகைப்புற்று நிற்கிறேன். காத்தருள வேண்டும். நின்னை ஒழிய வேறு புகலிடம் எனக்கு இல்லை. ஓம் நமச்சிவாய போற்றி. ஐயனே, அடியவனைப் புறக்கணித்து விடாதே. உன் நாமம் பயில்கின்ற என்னைக் காத்தருள வேண்டும். ஓங்குக நின் வெற்றி. உன்னை வணங்குகிறேன்.

தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam

No comments:

Post a Comment