Monday, January 7, 2019

ஜனவரி-7 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning


தேவாரம்

   

     பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார் மனத்துள்ளே
     கலமலக் கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்
     வலமேந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
     நலமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
     அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

           பலப்பல தீய எண்ணங்களைக் கொண்டு ஆவேசத்தோடு திரிபவர்களின் மனத்தில் புகுந்து கலக்குகின்ற கணபதி என்ற யானையைக் கொண்டவர். வெற்றி தரும் ஞயிறு, திங்கள் என்ற இரண்டு சுடர்களையும் கொண்டவர். உயர்ந்த கயிலாய மலையையும், கெடில நதியையும் கொண்டவர். அத்தகைய சிவபெருமானின் உறவினராக நாம் இருப்பதால், நாம் எதற்கும் அஞ்சுவதில்லை, எம்மை அச்சுறுத்த கூடியதும் எதுவுமில்லை.

திருவாசகம்
             
மறுத்தனன் யானுன் அருள்
     அறியாமையில் என்மணியே
       வெறுத்து எனைநீ விட்டிடுதி கண்டாய்
வினையின் தொகுதி
     ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர
  கோசமங்கைக்கு அரசே
                 பொறுப்பர் அன்றே பெரியோர்
          சிறு நாய்கள் தம் பொய்யினையே.
   
          பெறுவதற்கு அரிய மாணிக்கமே, உனது பெருமை அறியாது, எனது அறியாமையால், திருவருளை நான் புறக்கணித்து விட்டேன். அதுவும் என் வினைப்பயனால் விளைந்ததுவே என்பதை நீ அறிவாய். ஆதலால் என்னை வெறுத்து ஒதுக்கி விடாதே. சிறியோர் பிழையை பெரியோர் பொறுப்பது இயல்பு அல்லவா? உத்தர கோசமங்கைக்கு அரசே, என் வினைகளை யெல்லாம் நீக்கி என்னை ஆண்டுகொள்ள வேண்டும்.




தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment