Thursday, January 10, 2019

ஜனவரி-10 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning


தேவாரம்

      பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்கும் சென்னி
      காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
      ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
      நீலம்சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடுமாறே.      
    
    
      சிறுவனாகவும், வயது முதிர்ந்தவனாகவும் தோற்றம் கொண்டவன், குளிர்ந்த நிலவு ஒளி வீசும் முடியை உடையவன்;, காலனைத் தன் காலால் உதைத்த கடவுள, காளை மாட்டின் மீது ஏறித் தில்லை என்னும் பதியுள் அமைந்த புகழ்மிக்க சிற்றம்பலத்தில், நீலம் சேர்ந்த கழுத்தோடு நீண்டு எரியும் நெருப்பு ஆடுவது போலவே தோன்றினார்.


திருவாசகம்

      விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
      மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
      தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
      பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
      கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
      அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.


         விண்ணவர்களுக் கெல்லாம் மேலான அறிவு நூல் ஆசானை, மண்ணுலகை ஆளுகின்ற வேந்தர்களுக் கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் மகாதேவனை, சங்கம் வைத்துத் தமிழ் காத்த தகைசார்ந்த பாண்டியன் ஆனவனை, மங்கை உமையவளின் பாகனை, யாம் விரும்புகின்ற திருப்பெருந்துறையிலே பெருமை மிக்க திருவடிகளைக் காண்பித்தருளி நாயனைய என்னை அடிமையாகக் கொண்ட திருவண்ணாமலை அண்ணலை நாம் பாடிப் பணிவோமாக.    


தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning

1 comment:

  1. அற்புதம் ஐயா 🙏🌹🔥

    ReplyDelete