Thursday, January 3, 2019

ஜனவரி 3 - தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam


தேவாரம்

           பேராது காமத்தில் சென்றார் போல்
               அன்றியே பிரியாது உள்கிச்
           சீரார்ந்த அன்பராய்ச் சென்று முன்
               அடிவீழும் திருவினாரை
           ஓராது தருமனார் தமர் செக்கில்
               இடும்போது தடுத்தாட் கொள்வான்
           பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்
               பெருமானைப் பெற்றாம் அன்றே.

        மனமே! அடியவர் இடையறாத காமத்தில் செல்லாது, இறைவனைப் பிரியாது நினைத்து, சிறப்புடைய அன்பராய்ச் சென்று இறைவன் திருவடி வணங்குவர். அத்தகைய திருவுடையவரை ஆராயாது காலதூதர் செக்கிலிடும்போது தடுத்தாட்கொள்வான் இறைவன். பேராளர் பலர் வாழும் சிதம்பரத்தில், சிற்றம்பலத்தில் அவன் இருக்கிறான். அவனை அன்றோ நாம் அடைந்தோம்.

திருவாசகம்
            
   ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
     சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
  மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
 நாயான நம்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகு ஏழும்
     ஆயானை ஆள்வானைப் பாடுதுங் காண் அம்மானாய்.
   

          இடையறாது நினைப்பவரது மனத்திலே நீங்காது நிற்பவனை, நினையாதவர்க்கு நெடுந்தொலைவில் உள்ளவனை, அறவோனை, திருப்பெருந்துறை நாயகனை, மாதொரு பாகனை, நாயனைய நம்மை ஆண்டு கொண்ட வள்ளலை, தாய்மையின் தத்துவமாக விளங்குகின்றவனை, ஏழு உலகங்களையும் தன் இன்னருளால் ஆள்பவனை நாம் வாயாரப் பாடி வணங்குவோம்.

தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam

No comments:

Post a Comment